கொரோனா காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு கையுறை வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகளையும், ஆயிரங்களில் மரணத்தையும் உருவாக்கி வரும் கொரோனாவின் வேகத்துக்கு இதுவரை தடை போட முடியவில்லை.
இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசிய நடவடிக்கைகளில், தேர்தல்களும் ஒன்றாகும். பல்வேறு மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளன.
மேலும் பல மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளது. இதில் பீகார் மாநிலம் முதலில் தேர்தல் களத்தை காண உள்ளது. அங்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட இருக்கும் இந்த தேர்தல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டு உள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-
* ஓட்டுப்பதிவு நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பொத்தானை பலரும் அழுத்த வேண்டியிருப்பதால், வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்படும். இது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்த உகந்தவையாக இருக்கும்.
* தேர்தலில் கொரோனா நோயாளிகளும் வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு நாளின் கடைசி மணி நேரம் இந்த நோயாளிகள் ஓட்டுப்போடுவதற்காக ஒதுக்கப்படும்.
* தேர்தலுக்கு முந்தையநாளே வாக்குச்சாவடிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்துவது கட்டாயம்.
* வாக்குச்சாவடி நுழைவாயிலில் வெப்பம் பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி வைக்கப்படும். தேர்தல் அல்லது துணை சுகாதார பணியாளர்கள் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பார்கள்.
* 1,500 வாக்காளர்களுக்கு பதிலாக 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
* வேட்பாளர் உள்பட5 பேர் மட்டுமே கொண்ட குழு வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி.
* கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்திக்கொள்ளலாம். இதற்கான இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி முன்கூட்டியே ஆய்வு செய்து சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை கடைப்பிடிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
* மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதித்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக தனி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.