பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Spread the love

பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.


புதுடெல்லி,

கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு பட்டியல் இனத்தவருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதற்காக அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு இது தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டன.

 

பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு தடை விதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த ஜே.யசோதா என்பவர் 2015-ல் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, ஏற்கனவே இதேபோன்று பட்டியல் இனத்தவரின் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக 2011-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பஞ்சாப் மாநில அரசு தாக்கல் செய்த மனு மற்றும் அரியானா மாநில அரசு, சில தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களுடன் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டு வந்தது.

சேலம் யசோதா மனு உள்ளிட்ட அனைத்து மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது.

கடந்த மாதம் 16-ந்தேதி இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

பட்டியல் சாதியில் உட்பிரிவுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை, அரசியலமைப்பு அட்டவணையில் பட்டியலிடப்பட்ட வகுப்புகளின் பிற ஒதுக்கீடுகளுடன் முரண்படாது. மாநில அரசுகளுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வரும் வகையில் அதிகாரம் உள்ளது. அதைப்போலவே பட்டியல் இனத்தவரின் உட்பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கருதுகிறோம்.

கூட்டாட்சி அமைப்பில் இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறும் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது என்றும் கருதுகிறோம்.

எனவே, பணியிடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று 2004-ம் ஆண்டில் ஈ.வி.சின்னையா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கிறோம்.

பட்டியல் இனத்தவர்களின் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான இந்த மனுக்கள் அனைத்தையும் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைக்க, தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு முன்வைக்க உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page