கொரோனா இறப்புவிகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழே குறைக்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,
மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, டெல்லியில் இருந்து கொண்டு, நேற்று 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் தலைமைச்செயலாளர்கள், சுகாதார செயலாளர்களுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
இந்த காணொலி காட்சி கலந்துரையாடலில் மராட்டியம், தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஆந்திரா ஆகிய 9 மாநிலங்களும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும் கலந்து கொண்டன. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலின்போது, நாட்டில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 89 சதவீதம், மேலே குறிப்பிட்டுள்ள 9 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசமும் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர்ச்சியான மற்றும் கடுமையான விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும், இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா வலியுறுத்தினார்.
மேலும், புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் குறைந்தது 80 சதவீத கேஸ்களில், அனைத்து நெருங்கிய தொடர்புகளையும் 72 மணி நேரத்துக்குள் கண்டுபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எல்லா மாவட்டங்களிலும் 10 லட்சம் பேருக்கு 140 மாதிரிகள் பரிசோதனை என்ற அளவில் தினமும் மேற்கொள்ளவும், கொரோனா உறுதி செய்வதை 5 சதவீதத்துக்கும் கீழாக குறைப்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
இந்த மாநிலங்களிலும், யூனியன் பிரதேசத்திலும் நிலவுகிற தற்போதைய கொரோனா வைரஸ் நிலவர விளக்கத்தை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் விளக்கினார். அதிகளவு இறப்புவிகிதம் கொண்டுள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது பற்றியும், பரிசோதனை, தடம் அறிதல், கண்காணிப்பு, கட்டுப்பாடு, வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், ஆம்புலன்சுகள், ஆஸ்பத்திரி படுக்கைகள், ஆக்சிஜன் கிடைத்தல் குறித்தும், சிகிச்சை நெறிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைமைச்செயலாளர்கள் தங்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள கொரோனா நிலவரம், பரவலை கையாள்வதற்கான தயார் நிலை, சவாலை எதிர்கொள்ள கிடைக்கக்கூடிய சுகாதார கட்டமைப்பு வசதிகள், அவற்றை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கவும், கொரோனா பாதுகாப்பு நடத்தையில் சமூகத்தை ஈடுபடுத்தவும் மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறினார்கள்.