கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்த ரஷ்யா, தற்போது இரண்டாவதாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால் தற்போது உலக முழுவதும் சுமார் 2.4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய ரஷ்யா, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக இந்த மாத துவக்கத்தில் அறிவித்தது.
இந்த நிலையில், இரண்டாவதாக ஒரு தடுப்பூசிக்கு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் டாடியானா கோலிகோவா தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அதிபர் விளாதிமீர் புதினிடம் இதனை அவர் தெரிவித்தார்.
சைபீரியாவின் வெக்டர் வைராலஜி நிறுவனம் தயாரித்து உள்ள இந்த தடுப்பூசியின் ஆரம்பக் கட்ட சோதனைகள் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் எனவும் டாடியானா கோலிகோவா தெரிவித்துள்ளார். முதல் இரண்டு கட்ட சோதனையில் எந்தவித எதிர்மறை விளைவுகளும் வெளிப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.