கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செப்டம்பர் 28-ந்தேதி திறக்கப்படும் என்றும் தனிநபர் மார்க்கெட் செல்ல அனுமதி இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,
கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கி வந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்பட தொடங்கின.
மலர் அங்காடியானது வானகரம் பகுதியில் உள்ள கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று கோயம்பேடு வியாபாரிகள் சார்பில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது குறித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது எனவும், முதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை 18.09.2020 அன்றும், அதற்கு அடுத்த கட்டமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை 28.09.2020 அன்றும், அதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.
அவ்வாறு அங்காடிகளை திறக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி மலர் அங்காடிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே கொள்முதல் செய்வதற்கு அங்காடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.
அதேபோல் அங்காடிக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘ஏ’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அங்காடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு சரக்குகளை இறக்கி, அந்த வாகனம் வெளியில் சென்ற பிறகு அந்த கடைக்கு அடுத்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும். கடைகளுக்கு வெளிபகுதிகளில் மற்றும் அங்காடியின் வேறு எந்த பகுதிகளிலும் சரக்குகளை இறக்கி வைப்பது மற்றும் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது.
கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும். அவ்வாகனங்கள் சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினமே இரவு 12 மணிக்குள் அங்காடியை விட்டு வெளியில் சென்று விட வேண்டும்.
சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகு ரக வாகனங்கள் அதிகாலையிலிருந்து நண்பகல் 12 மணி வரை மட்டுமே அங்காடிக்குள் அனுமதிக்கப்படும். அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி இல்லை. அதுபோலவே, தனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைச்செய்யப்பட்டுள்ளது. அங்காடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் மற்றும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகிய அனைத்து நபர்களும், முக கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும்.
மேற்கண்ட விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.