தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நீடித்தது ஏன்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Spread the love

தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நீடித்தது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசால் முழு மூச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை, தனிக்கவனம் செலுத்தப்பட்டு, இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடையச் செய்யும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுவதன் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இந்நோய் தொற்றுக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கும் காரணத்தாலும், இந்தியாவில், அதிக பரிசோதனைகள் செய்கின்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாலும், இந்நோய்த் தொற்று பரவல் குறைக்கப்பட்டு நாட்டிலேயே, தமிழ்நாட்டில்தான் குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகத்தான் இ-பாஸ் நடைமுறை தொடரப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?

பதில்:- இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவலை தடுக்க அரசு சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இ-பாஸ் கொடுத்தால் தான், தொற்று பரவல் ஏற்படும் சூழலில் அவர்களது தொடர்பை கண்டுபிடிக்க முடியும். இல்லையெனில் கண்டுபிடிக்க முடியாது. அதற்காகத்தான் இந்த நடைமுறை.

கேட்கிற அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பொறுப்புணர்வோடு அத்தியாவசிய பணிக்காக மட்டுமே செல்ல வேண்டும். ஏனென்றால், இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. கொடிய நோய் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. மக்களை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கட்டுப்பாடு உள்ளது.

கேள்வி:- ‘அரியர்’ தேர்வுக்கு பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று சொல்கிறீர்கள். இது உங்களுக்கு வாக்காக மாறுமா?

பதில்:- தற்போது இருக்கிற சூழலில் இந்த நோய்த் தொற்று எப்போது சரியாகும் என்று யாருக்கும் தெரியாது. கால அளவு என்பது இல்லை. தேர்வுகள் தள்ளித்தள்ளி போவதால், மாணவர்கள் மனஉளைச்சலில் இருந்து வருகிறார்கள். இதற்கு தீர்வு காணத்தான் இந்த அறிவிப்பு.

கேள்வி:- கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்து உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- எங்காவது முறைகேடு நடந்து, அது தொடர்பாக அரசிடம் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- கடலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படுமா?

பதில்:- ஏற்கனவே மருத்துவ கல்லூரி கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தோம். ஆனால் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி இருந்ததால் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை.

கேள்வி:- சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை அரசு கையகப்படுத்தி உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. அதேபோல் தனியார் கல்லூரியில் வாங்குவதைப் போல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்களே?

பதில்:- இது குறித்து அரசு பரிசீலிக்கும்.

கேள்வி:- ‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஏற்கனவே நீட் தேர்வு பற்றி ஜூலை மாதம் 8-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் இந்த தேர்வை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் எழுதினேன். தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கேள்வி:- திருக்கோவில்கள் எப்போது திறக்கப்படும்?

பதில்:- வருகிற 29-ந்தேதி (நாளை) மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

கேள்வி:- ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை சார்பில் பெரிய தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவில்லையே ஏன்?

பதில்:- எல்லோரும் கலந்து கொள்ள முடியாது. தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள பிரச்சினையை எடுத்து வைத்து உள்ளார்கள். சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர் அரசை பாராட்டி உள்ளனர். சோதனையான நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து தகுந்த நேரத்தில் கடன் உதவி பெற்று தந்ததற்கும், புதிய திட்டங்களை கொண்டு வந்ததற்கும் அரசை பாராட்டி பேசி உள்ளனர். அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வருவதும் வராததும் அவர்களது விருப்பம்.

மக்களின் வாழ்வாதாரம், தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் நானே நேரடியாக வந்து ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால் அதை சீர் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். சுய உதவிக்குழுவினருக்கும் நிறைய கடன் உதவி வழங்கி உள்ளோம்.

கேள்வி:- எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனரே?

பதில்:- இது தவறான தகவல். மாவட்ட கலெக்டர் அனைவருக்கும் தகவல் அனுப்பி விட்டார். அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அவர்கள் கலந்து கொள்வது அவர்களது கடமை. ஆனால் வருவதும், வராததும் அவர்களது விருப்பம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page