செப்டம்பர் 10-ந் தேதி ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன; இந்தியா-பிரான்ஸ் ராணுவ மந்திரிகள் முன்னிலையில் விழா

Spread the love

ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சி இந்தியா-பிரான்ஸ் ராணுவ மந்திரிகளின் முன்னிலையில் நடைபெறும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


புதுடெல்லி,

இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்கப்படுகின்றன. இதில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். இவற்றிலும் மற்ற விமானங்களைப் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

 

உலக அளவில் பலம் வாய்ந்த விமானப்படையை கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, ரபேல் போர் விமானங்களின் வருகை மேலும் வலுவூட்டும். ஏனெனில் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்.பி.டி.ஏ.வின் மெடடோர் ஏவுகணைகள், ஸ்கால்ப் நாசகார ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை இந்த விமானங்கள் கொண்டிருக்கும்.

பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில் 5 விமானங்களை கொண்ட முதல் தொகுதி கடந்த மாதம் 29-ந் தேதி இந்தியா வந்து சேர்ந்தது. இதில் தாக்குதல் விமானங்கள் 3-ம், பயிற்சி விமானங்கள் 2-ம் உள்ளன. இந்த விமானங்கள் உடனடியாக விமானப்படையில் இணைந்து 24 மணி நேரத்துக்குள் பயிற்சியை தொடங்கி உள்ளன.

ரபேல் போர் விமானங்கள் அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலும், மேற்கு வங்காளத்தின் ஹசிமரா தளத்திலும் இணைக்கப்படுகின்றன. எனவே முதல் தொகுதி 5 விமானங்களும் அம்பாலாவில் இணைக்கப்பட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டாலும், இன்னும் முறைப்படி இணைக்கப்படவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி நடத்துமாறு ராணுவ அமைச்சகத்துக்கு விமானப்படை பரிந்துரைத்து உள்ளது. இந்த தேதியை ராணுவ அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.

எனினும் அதற்கு முன்னதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா செல்வதால், 10-ந் தேதி இந்த விழா நடைபெறும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ரபேல் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்த்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லியும் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதமே ராஜ்நாத் சிங்குடன், பிளாரன்ஸ் பார்லி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவருடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இரு நாட்டு உறவுகள் குறித்து ராஜ்நாத் சிங்குடன், பார்லி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page