நீட் தேர்வை நடத்த அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக 6 மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு

Spread the love

நீட் நுழைவுத்தேர்வை நடத்த அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் 6 மாநில அரசுகள் சார்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு வருகிற செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது.

இதேபோல் பொறியியல் படிப்புக்கு ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நீட் மற்றும் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து கடந்த 17-ந் தேதி தீர்ப்பு கூறினார்கள். மாணவர்களின் பொன்னான ஓராண்டை வீணாக்க முடியாது என்றும், இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டால் அவர்களுடைய எதிர்காலமும், நடப்பு கல்வி ஆண்டும் பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த புதன்கிழமை பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அந்த கூட்டத்தில் நீட், ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, அந்த தேர்வுகளை நடத்த அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 6 மாநில அரசுகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேற்கு வங்காள சட்டத்துறை மந்திரி மொலாய் கடக், ஜார்க்கண்ட் மாநில நிதி மந்திரி டாக்டர் ராமேஷ்வர் ஓரான், ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா, சத்தீஷ்கார் மாநில உணவு விநியோகத்துறை மந்திரி அமர்ஜித் பகத், பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை மந்திரி பல்பீர் சிங் சித்து, மராட்டிய உயர் கல்வித்துறை மந்திரி உதய் ரவீந்திர சாமந்த் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீட் மற்றும் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான அம்சங்களை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கருத்தில் கொள்ள தவறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாக நிலவும் பதற்றமான சூழ்நிலையில் இதுபோன்று தேர்வுகளை நடத்த முடிவு எடுத்தது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நீட் மற்றும் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வுகளுக்காக மத்திய அரசுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேர்வு மையம் மட்டுமே அமைக்க தேவையான கால அவகாசம் இருந்தபோதிலும், ஒரே மாவட்டத்தில் பல தேர்வு மையங்களை அமைத்து இருப்பதை இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ள தவறி உள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது மட்டுமே, அந்த மாணவர்கள் தற்போது தேர்வை நடத்த தங்களின் விருப்பத்தை தெரிவித்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பிரச்சினையின் முழு பரிமாணத்தையும், சிக்கல்களையும் கருத்தில் கொள்ளாததோடு, பல தீவிரமான பிரச்சினைகள் குறித்து மவுனம் சாதித்து உள்ளது. “வாழ்க்கையின் ஓட்டம் போய்க்கொண்டுதான் இருக்க வேண்டும்” என்பதும், “மாணவர்கள் ஒரு முழு கல்வி ஆண்டை இழந்து விடக்கூடாது” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

“வாழ்க்கையின் ஓட்டம் போய்க்கொண்டுதான் இருக்கும்” என்ற நீதிபதிகளின் அறிவுரை தத்துவ ரீதியாக மிகவும் நன்றாக இருக்கலாம். ஆனால் நீட் மற்றும் ஜே.இ.இ. (மெயின்) தேர்வுகளை இந்த சூழலில் நடத்துவது குறித்து சட்டரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பகுப்பாய்வு செய்வதற்கு இந்த கருத்து சரியாக இருக்காது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யவில்லை என்றால் நாட்டில் மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெருமளவில் ஊறு விளைவிப்பது மட்டுமின்றி, இந்த தீவிரமான நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்களையும் இது கடுமையாக பாதிக்கும்.

ஜே.இ.இ. (மெயின்) தேர்வில் சுமார் 9.53 லட்சம் மாணவர்களும், நீட் தேர்வுக்காக 15.97 லட்சம் மாணவர்களும் பங்கேற்க பதிவு செய்து இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. ஜே.இ.இ. (மெயின்) தேர்வு ஒரு மையத்தில் சுமார் 1,443 மாணவர்கள் வீதம் 660 மையங்களில் நடத்தப்பட இருப்பதாகவும், இதேபோல் நீட் தேர்வு ஒரு மையத்தில் சுமார் 415 மாணவர்கள் வீதம் 3,843 மையங்களில் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படி அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் மாணவர்கள் கூடுவது தீவிரமான சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். இது கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரை முறியடித்துவிடும். இதுபோன்று பெரிய அளவில் கூடும்போது சமூக விலகலை கடைப்பிடிப்பதும் சாத்திய இல்லை. எனவே தேர்வு நடத்த அனுமதி வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கும், தேர்வுகளை ஒத்திவைப்பதற்கும் இந்த காரணம் ஒன்றே போதுமானது ஆகும்.

மத்திய அரசின் நடவடிக்கையை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் நோக்கத்தில் இந்த மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றின் தன்மை மந்தமாக இருந்த நேரத்தில் நுழைவுத்தேர்வுகள் நடத்துவதை ஒத்தி வைத்துவிட்டு, தற்போது நோய்த்தொற்று தீவிரமாக உள்ள நேரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு எடுத்து இருப்பது பெரிதும் முரண்பாடாக உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page