“கொரோனாவோடு வாழ பழகிக் கொண்டேன்” – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Spread the love

“கொரோனாவோடு வாழ பழகிக்கொண்டேன்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருமலை நாயக்கர் மகாலை சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளையும், விளக்குத்தூண் பகுதியில் நடைபெறும் பணிகளையும் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

 

மதுரையை ஏன் 2-வது தலைநகராக்க அறிவிக்க வேண்டும் என்று விளக்கி இருக்கிறேன். எனவே மதுரையை 2-வது தலைநகராக ஆக்குவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு எடுப்பார்கள். மதுரையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறோம். 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்காக முல்லை பெரியாறு லோயர் கேம்ப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மதுரை தூய்மையான நகரமாக மாற்றப்பட்டு வருகிறது. வைகை ஆறு தூய்மையான வைகையாக மாற்றப்பட்டு வருகிறது. வடமாநில பணியாளர்கள் இல்லாத காரணத்தினால். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் எந்த தொய்வும் ஏற்படக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியினை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா, கொரோனா என்று சொல்லிக்கொண்டு இருந்தோம். இப்போது கொரோனாவோடு வாழ பழகி கொள்ளத்தான் வேண்டும். நானே முக கவசம் இல்லாமல் கொரோனாவோடு வாழ பழகிக்கொண்டேன்.

இன்னும் 6 மாதங்களில் மதுரை மாறி விடும். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றியோடு, விசுவாத்தோடு இருப்போம். மக்களோடு, மக்களாக இருக்கிறோம். கொரோனா காலத்திலும் மக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுத்து இருக்கிறோம். எங்கள் பார்வை நேர்கொண்ட பார்வை. மகக்ள் பணியே மகேசன் பணி என அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

கல்வியை மத்திய பட்டியலில் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். இதனால் தான் நீட் தேர்வு வந்தது. அன்றே தி.மு.க. இதனை எதிர்த்து இருந்தால் நீட் தேர்வு வந்து இருக்காது. அப்போது காங்கிரோடு கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டு எல்லாவற்றையும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே தி.மு.க.தான். ஆனால் தஞ்சை பகுதியை வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்ததும் தி.மு.க.தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page