கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.எச்.வசந்தகுமார் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி – சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் இன்று அடக்கம்

Spread the love

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாரின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் அடக்கம் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் இன்று நடக்கிறது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி தமிழ்செல்வி, உதவியாளர் கோபி ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து எச்.வசந்தகுமார் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர் நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை உயிர் இழந்தார்.

எச்.வசந்தகுமார் உயிர் இழந்த அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையில் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

அதன்படி, எச்.வசந்தகுமார் உடல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று காலை 7.40 மணியளவில் சென்னை தியாகராயநகர் நடேசன் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. வசந்தகுமார் உடலில் காங்கிரஸ் கட்சி கொடி போர்த்தப்பட்டு இருந்தது.

எச்.வசந்தகுமாரின் உடல் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் அருகே, மனைவி தமிழ்செல்வி, மகன்கள் விஜய் வசந்த், வினோத் குமார், மகள் தங்கமலர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்து இருந்தனர்.

எச்.வசந்தகுமார் உடலுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், சிவராஜசேகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், பனங்காட்டு மக்கள் கழக நிறுவனர் சுபாஷ் பண்ணையார், , தட்சிணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, சாத்தான்குளம் முன்னாள் சேர்மன் எம்.ஆனந்தராஜ், தயாரிப்பாளர்கள் சங்க கில்ட் தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் இமான் அண்ணாச்சி ஆகியோர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

‘வசந்த் அன்ட் கோ’ நிறுவன ஊழியர்கள், வசந்த் தொலைக்காட்சி ஊழியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எச்.வசந்தகுமார் உடல் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார். அதன்படி, சத்தியமூர்த்தி பவனில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

எச்.வசந்தகுமார் உடல் வைப்பதற்கான மேடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அவருக்கு இரங்கல் தெரிவித்து ஆங்காங்கே பெரிய பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன. சத்தியமூர்த்தி பவனில் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் எச்.வசந்தகுமார் உடலை சத்தியமூர்த்தி பவனுக்கு எடுத்து வரும் முடிவு திடீர் என கைவிடப்பட்டது.

இதுகுறித்து, சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தொண்டர்களுக்கு விளக்கம் அளித்து கூறும்போது, “அரசு சார்பில் எவ்வித தடையும் இல்லை என்றும், எச்.வசந்தகுமாரின் மனைவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், எச்.வசந்தகுமாரின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்துக்கு காலை 11.30 மணியளவில் எடுத்து வரப்பட்டது. அங்கு ஆம்புலன்ஸ் வேனில் இருந்தபடி அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம், சு.திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் மலர் வளையம் வைத்து உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத் தலைவர் சந்திரன் ஜெயபால், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகி தெகலான் பாகவி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.ரஞ்சன்குமார், எஸ்.சி.பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் நாஞ்சில் பிரசாத் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எடுத்து செல்லப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகே எச்.வசந்தகுமாரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page