லடாக் எல்லையில் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தேசம் எங்களை நம்பலாம் எனவும் ராணுவ தளபதி நரவனே தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலால் கடந்த மே மாதம் முதல் அடிக்கடி இருதரப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் ஜூன் 15-ந்தேதி நடந்த பயங்கர சண்டையில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து இருநாட்டு ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த அமைதி நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே கடந்த 29-ந்தேதி பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவ முயன்றது. இதை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனால் லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
எனவே அங்குள்ள நிலவரம் மற்றும் இந்திய படைகளின் தயார் நிலை உள்ளிட்ட நிலைமையை ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி நரவனே நேற்று முன்தினம் லடாக் சென்றார். 2 நாட்களாக நடந்த இந்த ஆய்வுகளின்போது எல்லை நிலவரம் குறித்து வடக்கு பிராந்திய தளபதி ஒய்.கே.ஜோஷி, லே மைய 14-வது படைப்பிரிவு கமாண்டர் ஹரிந்தர் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் நரவனேக்கு விளக்கினர்.
இந்த பயணத்தில் எல்லையின் பல பகுதிகளுக்கு சென்ற நரவனே, அங்குள்ள நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் வீரர்களிடம் பேசி, சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள மிகுந்த உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-
உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதி முழுவதும் பதற்றமாக உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் படைகளை நிறுத்தி உள்ளோம். அங்கு எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்கவும் படைகள் சிறப்பாக தயாராக உள்ளன. இந்த விஷயத்தில் தேசம் எங்களை நம்பலாம்.
நல்ல உடல்நலம் மற்றும் மிகுந்த உறுதிப்பாட்டுடன் இருக்கும் நமது வீரர்களையும், கமாண்டர்களையும் பார்க்கும்போது மிகுந்த திருப்தி ஏற்படுகிறது. நமது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் அதன் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிக்கு பெயர் பெற்றது.
அங்கு பதற்றத்தை தணிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து செயல்முறைகளையும் நாங்கள் தொடர்வோம். மேலும் இயல்பு நிலை மாறாமல் இருப்பதை உறுதி செய்வோம்.
பதற்றத்தை தணிப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. ராணுவ மற்றும் தூதரக மட்டத்திலான செயல்பாடுகள் தொடர்கின்றன. பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு நரவனே தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தியா தனது பிராந்திய ஒருமைப்பாட்டு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார். அதேநேரம் நீண்டகால பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
கொரோனா தொற்று, பேச்சுவார்த்தைகளை முடக்கவில்லை எனக்கூறிய அவர், டிஜிட்டல் வசதிகள் மூலம் இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.