போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு; பிரபல நடிகை ராகிணி திவேதி அதிரடி கைது

Spread the love

போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நடிகை ராகிணி திவேதியை போலீசார் அழைத்து வந்த போது எடுத்த படம்.

பெங்களூரு,

போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக பிரபல கன்னட மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

 

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னட மற்றும் தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர், மற்றொரு நடிகையான சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ஓட்டல் அதிபர் கார்த்திக் ராஜ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இவர்களில் நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர் பெங்களூரு ஜெயநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். ரவி சங்கர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகை ராகிணி திவேதியும், ரவி சங்கரும் திருமணம் செய்து கொள்ளலாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்காக ராகிணி திவேதிக்கு ரவி சங்கர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பெங்களூரு எலகங்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு 6 போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது நடிகை ராகிணி திவேதி வீட்டில் தான் இருந்தார். இதையடுத்து, அவர் பயன்படுத்தி வந்த 4 செல்போன்கள், 2 மடிக்கணினிகளை போலீசார் கைப்பற்றினார்கள். அவரது வீட்டில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ராகிணி திவேதியின் வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலையில் இருந்து மாலை வரை நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலையில் நடிகை ராகிணி திவேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராகிணி திவேதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காணொலி காட்சி மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதி கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அவர் கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ். சிவம், கெம்பேகவுடா, வீரமதகரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்த நிமிர்ந்து நில் படத்தில் ராகிணி திவேதி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page