ஈரானில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுவதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தெஹ்ரான்,
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரானில் 7 மாதங்களாக கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஈரானில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுவதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.