ஜப்பானை சூறையாடிய ஹைசென் புயல் தென் கொரியா நோக்கி நகர்ந்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ,
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை, கடந்த வாரம் ‘மேசக்‘ என்ற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் வீசிய புயலில், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்ததில், மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், இருளில் மூழ்கின.
மேலும் இந்த புயல் காரணமாக அமாமி ஓஷிமா தீவுப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது. நியூசிலாந்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்த சரக்கு கப்பலில் 43 மாலுமிகளும் சுமார் 6 ஆயிரம் பசுக்களும் இருந்ததாக தெரிகிறது.
3 மாலுமிகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 40 பேரின் கதி என்ன? என்பது இன்னமும் தெரியவில்லை. இதனிடையே கியூஷு தீவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மேசக் புயல், திசை மாறி சென்று தென் கொரியாவை தாக்கியது.
இந்த நிலையில் மேசக் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் இன்னும் மீண்டு வராத நிலையில் அங்கு ஹைசென் என்கிற சக்தி வாய்ந்த புயல் உருவாகியது.
இந்தநிலையில், தெற்கு ஜப்பானை ஹைசென் புயல் தாக்கிய போது , மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் தாக்கியதைத் தொடர்ந்து, சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஹைசென் புயல் ஜப்பானில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 30 – க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 160 கி.மீ., வேகத்தில் வீசிய புயலில், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்ததில், மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் , சுமார் 20 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஹைசென்ன புயல் , தென் கொரியாவின் புசான் நகரை நோக்கி செல்வதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புசான் நகர மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.