அமெரிக்காவில் தங்களுக்கு, கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம்; வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என இரு சட்டங்கள் உள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவில் தங்களுக்கு இரு சட்டங்கள் உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில், “ அமெரிக்க நீதி துறையில் நிறவெறி இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது நாம் பார்க்கும் யதார்த்தம் பல தலைமுறைகள் கடந்து நாம் பார்த்து வருகிறோம். அமெரிக்க நீதி துறையில் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என இருவேறு சட்டங்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று அவர் தெரிவித்தார்.