“கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து விழிப்புணர்வுதான்” – திருவள்ளூர் மாவட்ட ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Spread the love

அரசு அறிவித்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து விழிப்புணர்வுதான் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சென்னையில் இருந்து திருவள்ளூர் வரும் வழியில் சுமார் 40 சதவீதம் நபர்கள் முக கவசம் அணியாமல் உள்ளதைக் காண நேர்ந்தது. அவர்களும் முககவசம் அணியக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், இந்த தொற்றிற்கு ஒரே மருந்து விழிப்புணர்வுதான்.

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நாம் இந்த தொற்றை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நோயின் தன்மை மற்றும் வீரியத்தை அறிந்து பொதுமக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

பூந்தமல்லி வட்டத்தில், கூவம் ஆற்றின் குறுக்கே பழுதடைந்த கொரட்டூர் அணைக்கட்டை சுமார் ரூ.32.45 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கண்டலேறு-பூண்டி கால்வாயினை 10 கிலோ மீட்டர் வரை வலுப்படுத்தும் பணிகள் சுமார் ரூ.24.79 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளன. தாமரைப்பாக்கம் அணைக்கட்டின் துண்டிக்கப்பட்ட சுவற்றை மேம்படுத்தும் பணி சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தொடங்கப்படவுள்ளது.

திருத்தணி வட்டம், இலுப்பூர் கிராமத்தின் அருகே நகரி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி, கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஊட்டுக் கால்வாய் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தும் 2 பணிகள் பரிசீலனையில் இருக்கின்றன. இவ்வாறு, இந்த மாவட்டத்தில் பல தடுப்பணைகள் கட்டும் பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

இந்த மாவட்டத்தில் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அ.தி.மு.க. அரசு ரூ.386 கோடி மதிப்பீட்டில் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு, தற்பொழுது கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக வரலாற்றிலேயே 11 அரசு மருத்துவ கல்லூரிகளை சுமார் 2 ஆண்டு காலத்தில் பெற்று, அதற்கான கட்டிட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் நடப்பாண்டில் இந்த மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

திருத்தணி நகராட்சிக்கு சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.158 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறு குடியிருப்புத் திட்டத்தில், ரூ.516 கோடி மதிப்பீட்டில் 3,880 அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.

அனைவருக்கும் வீட்டுவசதி திட்ட பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தில் ரூ.479.70 கோடி மதிப்பீட்டில் 15,990 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளில் 1689 பணிகள் முடிவுற்றுள்ளன, 6,493 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 7,808 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படி மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கின்ற திட்டத்தை அ.தி.மு.க. அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது.

2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.620 கோடி முதலீட்டில் 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணியைத் தொடங்கியிருக்கின்றன. மேலும், 8 நிறுவனங்கள், ரூ.13,300 கோடி முதலீட்டில் 1,03,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளன. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. அரசு, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவி, இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியது. அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால் இத்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக, இன்றைக்கு இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.

கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைவாக இருந்தது, இப்பொழுது அங்கும் படிப்படியாக அதிகரித்திருக்கின்றது. ஆனால், தமிழகத்தில் முன்பு கொரோனா நோய்த்தொற்று ஆங்காங்கே பரவியிருந்தது. அரசு எடுத்த துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.

இது படிப்படியாக குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அரசினுடைய எண்ணம். அதன் அடிப்படையில், அனைத்து தளர்வுகளும் வழங்கப்பட்டுவிட்டன. இருந்தாலும், கொரோனா நோய் தொற்று பரவல் முழுமையாக குறையாத காரணத்தால், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றை திறக்க முடியவில்லை.

எனவே, பொதுமக்கள் விழிப்போடு இருந்து, அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால், இந்த நோய்ப் பரவலைத் தடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பலாம். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page