தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி செயலாளர் தலைமையில் நிபுணர் குழு: அரசாணை வெளியீடு

Spread the love

தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

புதிய தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் இருமொழி கொள்கையே தொடரும் என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை சார்பில் குழு அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, புதிய கல்வி கொள்கையில் உயர்கல்வியில் இருக்கும் கருத்துகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க உயர்கல்வி துறை சார்பில் உயர்கல்வி துறை செயலாளர் அபூர்வா தலைமையில் ஏற்கனவே உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வியில் இருக்கும் கருத்துகளை ஆராய குழு அமைத்து பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கல்வி செயலாளர் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் பள்ளிக்கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நிதித்துறையின் சிறப்பு செயலாளர் பூஜாகுல்கர்னி, சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குனர் ஜி.லதா, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையின் இயக்குனர் கவிதா ராமு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கமிஷனர் சி.முனியநாதன், யுனிசெப்-ன் சமூக சிறப்பு கல்வி கொள்கையாளர் அகிலா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.பஞ்சநாதம், திருவள்ளூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதிமுருகன், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மனிதநேயத்துறை இணை துணைவேந்தர் ஆர்.பாலசுப்பிரமணியன், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், பள்ளிக்கல்வி துறையின் முன்னாள் இயக்குனரும், பாரத சாரண-சாரணியர் பிரிவின் மாநில தலைவருமான ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் முன்னாள் உறுப்பினர் சுந்தரபரிபூரணம் பக்‌ஷிராஜன், திருவண்ணாமலையை சேர்ந்த பள்ளி ஆசிரியரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான வி.கே.ஜெயஸ்ரீ ஆகியோர் உறுப்பினராகவும் உள்ளனர்.

தேசிய கல்வி கொள்கையின் அனைத்து உந்துதல் பகுதிகளிலும், தமிழ்நாடு அதன் இருமொழி கொள்கைகளை தொடர்வது குறித்து அரசுக்கு கொள்கை ரீதியான பதிலை ஆலோசனையாக அளிக்கும். வளங்களின் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையில் அமல்படுத்துவது பொருத்தமாக இருக்குமா? என்பது குறித்து ஆலோசனை வழங்கும்.

மேற்கூறியவற்றில் தொடர்புடைய விஷயங்கள் மற்றும் அரசு குறிப்பிடும் விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை தெரிவிக்கும். குழு அமைக்கப்பட்டதில் இருந்து ஒரு வருடத்துக்குள் தொடர்புடையவர்களிடம் உரிய ஆலோசனைகளை செய்து, இந்த குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும். இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது இடைக்காலத்திலோ அரசு விரும்பியப்படி ஒவ்வொரு பாடத்திலும் குழு அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

குழுவின் பணிகளை எளிதாக்குவதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர், சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குனர் தகுந்த முறையில் உதவுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page