இறுதி செமஸ்டர் தேர்வு 22-ந் தேதி தொடங்குகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Spread the love

இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

 


சென்னை,

இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தேர்வை எழுதலாம்.

கொரோனா தொற்று காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இறுதி செமஸ்டர் தேர்வை வருகிற 15-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தங்களுக்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் தேர்வு நடத்துவதற்கான தேதியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் நிறைவு பெறும்.

மாணவர்கள் மடிக்கணினி, கணினி, ஸ்மார்ட் செல்போன், டேப் போன்றவற்றை இணையதளம், கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதியுடன் கூடிய சாதனங்களை கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த தேர்வை எழுதலாம். வினாத்தாள்கள் பல்வேறு தேர்வு வினாக்களை கொண்டதாக (மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின் டைப்) இருக்கும்.

இந்த தேர்வை மாணவர்கள் பழகிக்கொள்வதற்கு ஏதுவாக, தேர்வுகள் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு முன்போ ஒரு மாதிரி தேர்வு ஏற்பாடு செய்யப்படும். அந்த மாதிரி தேர்வுக்கு முன்பாக தேர்வர்களுக்கான வழிமுறைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் இறுதி செமஸ்டர் தேர்வுகளின் நேர அட்டவணை மற்றும் பிற விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் இந்த திட்டம் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்கு உட்பட்டது ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக்கொள்ள உயர் கல்வித்துறை அறிவுறுத்தி இருப்பதாகவும், பல்கலைக்கழகங்கள் அந்த பகுதி மாணவர்களின் வசதிகளுக்கேற்ப ஆன்லைன் தேர்வை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பான முறையான அறிவிப்பை உயர் கல்வித்துறை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page