‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெறுகிறது- தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு அச்சத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை

Spread the love

எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

மதுரை,

இந்த தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. ஆனால் பலன் இல்லை.

எனவே, திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு பயத்தால் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த 9-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்த சோகம் மறைவதற்குள் நேற்று மதுரையில் ஒரு மாணவியும், தர்மபுரியில் ஒரு மாணவரும், திருச்செங்கோட்டில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஜோதி ஸ்ரீ துர்கா. இவரது தந்தைமுருகசுந்தரம், மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது அணியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தாயார் அபிராமி வேளாண்மை துறையில் அதிகாரியாக உள்ளார்.

மாணவியின் தம்பி ஸ்ரீதர் (14) பள்ளியில் படித்து வருகிறார். இவர்களது வீடு, மதுரை நத்தம் சாலையில் உள்ள ரிசர்வ் லைன் குடியிருப்பில் உள்ளது.

ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் ‘நீட்’ தேர்வு எழுதினார். அதில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை.

எனவே இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மதுரையில் உள்ள தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். நீட் தேர்வு நெருங்கியதால், டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஒரு வாரமாக தினமும் காலையில் இருந்து இரவு வரை பல மணி நேரம் படித்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேர்வுக்காக படிக்க முடிவு செய்தார்.

எனவே பெற்றோரையும், தம்பியையும் வீட்டில் உள்ள தனித்தனி அறையில் படுக்க சொல்லிவிட்டு இவர் மட்டும் ஹாலில் படித்துக்கொண்டிருந்தார். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பதால் ஜோதி ஸ்ரீ துர்கா சோர்வாகி விடக்கூடாது என்று கருதி அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு டீ போட்டு கொடுக்க முருகசுந்தரம் எழுந்தார்.

அப்போது அவர் கதவை திறக்க முயன்றபோது வெளிப்பக்கம் பூட்டி இருந்தது. உடனே வெளியில் இருந்த போனை தொடர்பு கொண்ட போது, அதை ஜோதி ஸ்ரீ துர்கா எடுக்கவில்லை.

தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி

இதனால் பயந்து போன முருகசுந்தரம், அன்று இரவு பட்டாலியன் காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் கனகராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்தார். அவர் வந்து வீட்டின் முன்கதவை திறந்து உள்ளே பார்த்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததால் அலறினார்.

பின்னர் முருகசுந்தரம் இருந்த அறையின் கதவை கனகராஜ் திறந்து விட்டார். வெளியே வந்த அவர், மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அலறி துடித்தார். சத்தம் கேட்டு எழுந்து ஒடி வந்த மாணவியின் தாய், தம்பியும் கதறி அழுதனர். இது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜோதி ஸ்ரீ துர்காவின் உடலை மீட்டனர். உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வு பயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாணவி படித்துக்கொண்டிருந்த ஹாலில் போலீசார் சோதனை நடத்தி, அவர் கைப்பட எழுதிய 7 பக்க கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், குடும்பத்தினர் தன்னை மன்னித்து விடும்படியும் உருக்கமாக ஜோதி ஸ்ரீ துர்கா எழுதி இருந்தார். இதுதொடர்பாக அவர் போனில் பேசி, ஒரு ஆடியோவையும் பதிவு செய்து இருந்தார்.

மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் உடல் தத்தனேரி மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு கட்சியினர் வந்து மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

தர்மபுரி மாணவர்

இதேபோல் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் ஆதித்யா (20). இவர் தர்மபுரி இலக்கியம்பட்டி செந்தில் நகர் செவத்தா கவுண்டர் தெருவில் வசித்து வரும் விவசாயி மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆவார். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதினார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக ஆதித்யா தீவிரமாக படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மணிவண்ணன், சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடைபெறும் விவசாய பணிகளை பார்வையிட சென்று விட்டார். மேலும் ஜெயசித்ராவும் வீட்டில் இருந்து உறவினர்களை காண வெளியே சென்று இருந்தார்.

பெற்றோர் கதறல்

வீட்டில் தனியாக இருந்த மாணவர் ஆதித்யா படுக்கை அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின் விசிறியில் தனது தாயாரின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்த ஜெயசித்ரா தனது மகன் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை கண்டார். உடனே அவர் ஆதித்யா என்று அழைத்தார். அதற்கு எந்த பதிலும் இல்லாததால், அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆதித்யா பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

மாணவர் ஆதித்யா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் உள்ள மையம் ஒன்றில் ‘நீட்’ தேர்வு எழுத இருந்த நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதால் அவர் தேர்வுக்கு சரியாக தயாராக முடியாத மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாணவரின் வீட்டில் எந்த ஒரு கடிதமும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு மாணவர்

தற்கொலை செய்து கொண்ட மற்றொரு மாணவரின் பெயர் மோதிலால் (21). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரைகேட் மலைசித்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை முருகேசன் திருச்செங்கோட்டில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். தாயார் பெயர் கோமதி. மோதிலாலுக்கு சுபாஷ் (16) என்ற ஒரு சகோதரர் உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோதிலால் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றார். 2 முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தேர்ச்சி பெறாததால் 3-வது முறையாக நீட் தேர்வு எழுத இந்த ஆண்டும் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக தன்னை தயார் படுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தான் தங்கி இருந்த அறையில் மோதிலால் திடீரென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு அச்சத்தால், மோதிலால் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை கைப்பற்றி திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மூன்று தற்கொலை சம்பவங்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page