சென்னை கலைவாணர் அரங்கத்தில்-தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது

Spread the love

 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் மானிய கோரிக்கை விவாதத்துடன் முடிவடைந்தது. அப்போதே, கொரோனா பாதிப்பு தொடங்கியதால், அந்த கூட்டத்தொடர் வேகமாக முடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆண்டின் 2-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சபாநாயகர் ப.தனபாலும் அங்கு சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே, தமிழக அமைச்சர்களில் 6 பேரும், எம்.எல்.ஏ.க்களில் 34 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனால், சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, எடுக்கப்பட்ட பரிசோதனையில், 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் கூட்டம் தொடங்குகிறது.

இன்றைய கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யான எச்.வசந்தகுமார் ஆகியோரின் மறைவு மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மறைவு குறித்த இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) பல்வேறு அரசினர் அலுவல்கள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (16-ந்தேதி) 2020-2021-ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பான அறிக்கையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படும். மேலும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்கள், அவசர சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. எனவே அரசியல் ரீதியான காரசார விவாதங்கள், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. இடையே ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அரசு மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த எதிர்க்கட்சிகள், அரசிடம் நேருக்கு நேர் பல்வேறு குற்றச்சாட்டுகளை இந்த சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்பும். அதற்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.

‘நீட்’ தேர்வு மரணங்கள், கூடுதல் மின்சார கட்டண வசூல் விவகாரம், பிரதமர் கிசான் திட்ட முறைகேடு, மாநிலத்தின் பொருளாதார நிலை உள்பட பல்வேறு அம்சங்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான விவாதத்துக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகள் 40-க்கும் மேற்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த கூட்டத்தொடரில் மிகுந்த முக்கியமாக கருதப்படுகிறது.

மேலும் அரசுக்கு எதிராக காரசார விவாதங்கள், குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு போன்ற நிகழ்வுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு இடையே சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கலைவாணர் அரங்கத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் நேற்றே போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page