இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த சீனா மீண்டும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டன்,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.
இந்திய வீரர்கள் பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு அரசு வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்தியா – சீனா ராணுவம் இடையே பிரிகாட் கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில்,
இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு அதிபர் ஜி ஜின்பிங் தான் காரணம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முயற்சியில் சீன ராணுவம் தோல்வியடைந்தது. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் தோல்வியானது பல விளைவுகளை ஏற்படுத்தும். சீன ராணுவத்தின் தலைவராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் உள்ள , ஜி ஜின்பிங்கிற்கு, இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தவும் , இந்த தோல்வி தூண்டுவதாக உள்ளது. கல்வானில் நடந்த மோதலில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த பலி 60 ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது.
கல்வானில், இந்திய ராணுவம் கடுமையாக போராடியது. ஆனால், இதில் சீனா தனது தோல்வியை ஒத்து கொள்ளவில்லை. மலையின் உயரத்தில் சீனா சமீபத்தில் ஆக்கிரமித்த பகுதி ஒன்றை, இந்தியா மீண்டும் மீட்டெடுத்தது. இது சீன வீரர்களை வியப்படைய வைத்தது. அதிர்ச்சியடைந்த சீனா ராணுவம் பதிலடிக்கு கொடுக்க முயன்றனர். ஆனால், சீனாவின் முயற்சி பலனளிக்கவில்லை.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
பாங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையோரத்தில் இந்தியா கூடுதல் வீரர்கள், டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை நிறுத்தியன் மூலம் இப்பகுதியில் தனது இராணுவ இருப்பை மேலும் உயர்த்தி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.