ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ,
ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் அறிவித்தார்.
முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா, ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.
அதன்படி ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 14-ந் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர் புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டளித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று யோஷிஹைட் சுகா பெரும் வெற்றி பெற்றார். ஷிகெரு இஷிபா 68 ஓட்டுகளும், முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா 89 ஓட்டுகளும் பெற்றனர்.
71 வயது நிரம்பிய யோஷிஹைட் சுகா வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார். மேலும் இவர், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம் என்பதால் யோஷிஹைட் சுகா அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை பதவி வகிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.