எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்குபெற்ற அ.தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், அந்த கட்சியின் செயற்குழு வருகிற 28-ந் தேதி கூடுகிறது.

சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிந்தது.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க மாலை 4.45 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் ‘அம்மாவின் (ஜெயலலிதா) அரசியல் வாரிசு… வாழ்க, நாளைய முதல்வர்… வாழ்க’ என்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மாலை 4.53 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள், ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர்… வாழ்க, தமிழகத்தின் விடிவெள்ளி… வாழ்க’ என்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
கடந்த மாதம் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளும், அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் குழு தனித்தனியாக நடத்திய அவசர ஆலோசனைகளும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த சலசலப்பு ஓய்ந்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் எழுப்பிய வாழ்த்து கோஷம் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. வாழ்த்து கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் நேற்றைய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எதிரொலித்தது. கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் கே.பி.முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசுகையில், “சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை வலுவாக நியமிப்பது முக்கியமாகும். என் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை வலுவாக்கி இருக்கிறேன். அதுபோல அனைத்து மாவட்டங்களிலும் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் களத்தில் அனைத்து நிர்வாகிகளும் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும். கடினமாக உழைத்து, அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அரும்பாடு படவேண்டும்” என்றார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கட்சி பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு கூட முதல்-அமைச்சரிடம், ‘கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வாரம் 2 முறை வந்து நிர்வாகிகள்-தொண்டர்களை சந்தித்து பேச உள்ளேன்’ என்று தெரிவித்தேன். உடனே முதல்-அமைச்சரும், அப்படியா… அப்போ நானும் வருகிறேன்’ என்றார். அதன் எதிரொலியாகத்தான் இந்த அவசர ஆலோசனை கூட்டமும் கூட்டப்பட்டு இருக்கிறது. கட்சி பணி என்பது மிக முக்கியம். கட்சிக்காக பதவி விலகி கட்சிப்பணியாற்ற தயார். என்னைப் போலவே 10 அமைச்சர்களும் பதவி விலகி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று சொன்னேன். ஆனால் யாரும் அதற்கு முன்வரவில்லை. நமது பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி கட்சிக்காக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டும். அந்த கூட்டத்தின் ஆலோசனையின்படியே கட்சியும், ஆட்சியும் நடக்கவேண்டும். கட்சியில் நாங்கள் மீண்டும் சேரும்போது இப்படித்தான் முடிவும் எடுக்கப்பட்டது. அதை ஏன் இன்னும் செய்யவில்லை? எனவே உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்று வலுயுறுத்துகிறேன்” என்றார்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இப்போதைய நிலையில் அந்த குழுவை அமைக்க முடியாது. என்னை நம்பி ஏராளமானோர் கட்சியில் இருக்கிறார்கள். நான் யாரை அக்குழுவில் நியமிப்பது? எந்த அடிப்படையில் நிர்வாகிகளை அக்குழுவுக்காக தேர்வு செய்வது? எனவே அந்த குழுவை நியமிப்பது தற்போது சாத்தியம் இல்லை” என்றார். மேலும், “அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் கூறியபடி இனி அவரும், நானும் கட்சி அலுவலகத்துக்கு வாரம் இருமுறை வருவோம். நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசுவோம்” என்றார்.
ஆர்.வைத்திலிங்கம் பேசும்போது, “தொண்டர்களை வலுப்படுத்துவது தான் மிகவும் முக்கியமாகும். ஆட்சி ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தொண்டர்களை வலுப்படுத்தும் செயல்பாடுகளும் தீவிரமாக நடைபெறுவது அவசியமாகும்” என்றார்.
ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி தலைமை அலுவலகம் வந்து நிர்வாகிகள்-தொண்டர்களை சந்திக்க போகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். எனவே அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும் அழைத்து பேசுங்கள். ஏனென்றால் பலர் குமுறலுடன் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசவேண்டும். கட்சியில் சூழ்ச்சியும், தந்திரமும் தெரியாத ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் எக்காரணம் கொண்டும் வருத்தப்பட வைக்காதீர்கள். அவருக்கு சந்தோஷம் தரும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடுங்கள்” என்றார்.
மனோஜ்பாண்டியன் பேசுகையில், “கட்சி பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் கட்சியில் இருந்து இன்றைக்கு ஓரங்கட்டப்பட்டு மனவேதனையில் இருக்கிறார்கள். பிரிந்து கிடந்த இந்த இயக்கம் ஒன்றுபட்ட சமயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ அதை செயல்படுத்த வேண்டும். யாரையும் வருத்தம் கொள்ள செய்யாமல், கட்சி பணிகளை தீவிரமாக நாம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் தங்கமணி பேசுகையில், “அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதை இப்போதே அறிவித்தாக வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை தெளிவாக சொல்லியாக வேண்டும்” என்றார்.
இவ்வாறு கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கள் விவாதங்களை முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.