தமிழக அரசுக்கு மின் ஆளுமை விருது எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்

Spread the love

மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மின் ஆளுமை விருதினை எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து, எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழக அரசிற்கு வழங்கப்பட்ட 2018-19-ம் ஆண்டுக்கான மின் ஆளுமை விருது மற்றும் பாராட்டு சான்றிதழை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார்.

 

ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் ஆண்டுதோறும் பல்வேறு இனங்களின் கீழ், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2018-19-ம் ஆண்டுக்கான ‘தீன் தயாள் உபாத்யாய’ ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது தர்மபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும்,

சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் (கிழக்கு) கிராம ஊராட்சி, ஈரோடு மாவட்டம் குருமந்தூர் கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் அம்புகோவில் கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் கிராம ஊராட்சி, கோவை மாவட்டம் இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சி, காஞ்சீபுரம் மாவட்டம் மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஊரகப் பகுதி மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வலுவான கிராம சபையின் பங்களிப்புடன் செயல்படுத்தியமைக்கான ‘நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை விருது’ கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

கிராமப்புற குழந்தைகளின் நலனை பேணும் வகையிலான வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான ‘குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது’ விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அனுமந்தபுரம் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை பெற்ற தர்மபுரி மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.யசோதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெ.லதா, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கரட்டூர் கே.கே.மணி, கிராம ஊராட்சி தலைவர்கள் எஸ்.சாந்தி(ஆண்டாங்கோவில் கிழக்கு கிராமம்), என்.சி.தேவி(குருமந்தூர்), கா.சுமன் காளிதாஸ்(அம்புகோவில்), பி.மகேஸ்வரன்(நெடுங்கல்), ஏ. சதானந்தம்(இக்கரை பொழுவாம்பட்டி), மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி தனி அலுவலர் பி.பிச்சையம்மாள், களவனூர் கிராம ஊராட்சி தனி அலுவலர் எம்.செந்தில்முருகன், அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தனி அலுவலர் பி.மணிவாசகம் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச்செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு, ‘டயல் பார் வாட்டர் 2.0’ என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது மற்றும் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது ஆகிய விருதுகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page