மொத்த பாதிப்பு 54 லட்சத்தை கடந்தது இந்தியாவில் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 12 லட்சமாக உயர்வுகொரோனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்

Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ள நிலையில், நாட்டில் தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை 12 லட்சமாக உயர்ந்துள்ளது.


புதுடெல்லி,

உலக அரசுகளுக்கும், மருத்துவத் துறைக்கும் பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா தொற்று தினமும் லட்சக்கணக்கில் புதிய நோயாளிகளை உருவாக்கி வருகிறது. அத்துடன் ஆயிரக் கணக்கான உயிர்களையும் பலி வாங்கி வருகிறது. இந்த தொற்றுக்கு எதிராக எந்தவித தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லாததால் அந்த வைரசின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் 2-ம் இடம் வகிக்கும் இந்தியா, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையிலும் 2-ம் இடத்தில் நீடிக்கும் சோகம் தொடர்கிறது. இங்கு தொற்று பாதிப்பை குறைத்து கொரோனாவை வெல்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

 

இதில் முக்கியமாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்த மத்திய அரசும், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முதல் முறையாக 12 லட்சத்து 6 ஆயிரத்து 806 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 60 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி வரை வெறும் 10 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது தினசரி சராசரியாக 12 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு நாட்டின் பரிசோதனை வசதிகள் முன்னேறி உள்ளன.மொத்தமுள்ள 6.36 கோடி பரிசோதனைகளில் கடைசி 1 கோடி பரிசோதனைகள் மட்டும் வெறும் 9 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது சிறப்பாகும். நாடு முழுவதும் தற்போது 712 தனியார் பரிசோதனைக்கூடங்கள் உள்பட 1,773 பரிசோதனைக்கூடங்களில் இரவு-பகலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 10 லட்சம் பேரில் 46 ஆயிரத்து 131 பரிசோதனைகள் என்ற அளவை இந்தியா எட்டியுள்ளது. இதைப்போல 10 லட்சம் பேரில் 140 பரிசோதனைகள் தினசரி மேற்கொள்ள வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலை இந்தியா ஏற்கனவே கடந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 92 ஆயிரத்து 605 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 620 ஆக உயர்ந்து விட்டது.

அதேநேரம் மேற்படி 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 612 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 43 லட்சத்து 3 ஆயிரத்து 43 ஆக அதிகரித்து உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 79.68 சதவீதம் ஆகும்.

தற்போதைய நிலையில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 பேர் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். இது 18.72 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 94 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து சாதித்துள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 52 சதவீதம் பேரும் இந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கையை 86 ஆயிரத்து 752 ஆக உயர்த்தி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் உச்சம் பெற்ற மாநிலமாக மராட்டியம் தொடர்ந்து நீடிக்கிறது. அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு, அதிக எண்ணிக்கையிலான சிகிச்சை பெறும் நோயாளிகள் என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறது. அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் இந்த மாநிலமே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page