கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்றக்கோரி மனு: விசாரணைக்கு ஏற்றது மதுரா கோர்ட்

Spread the love

கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

மதுரா,

உத்தர பிரதேசத்தின் மதுரா கோயிலை கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா மேனேஜ்மெண்ட் கமிட்டி ஆகியவை நிர்வகித்து வருகின்றன. இவ்விரண்டின் இடையே கடந்த 1968 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருக்கும் என்பது முக்கியமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை, மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் கடந்த ஜூலை 20, 1973 இல் ஏற்கப்பட்டு பதிவு செய்து செயல்பாட்டில் உள்ளது.

இந்த சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டது என்றும், இதை ரத்து செய்து மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை எனக்கூறி மதுரா சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று விஷ்னு ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற மதுரா மாவட்ட நீதிமன்றம், மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page