சர்தார் படேல் உயிரியல் பூங்காவில் கிளிகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

Spread the love

உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

கெவாடியா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் 4 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆரோக்யா வன்” எனப்படும் மூலிகை பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. அவற்றின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிய தகவல்களையும் இந்த பூங்கா வழங்குகிறது. மூலிகை பூங்காவை திறந்த வைத்த பின், பிரதமர் மோடி அதனை பார்வையிட்டார்.

இறுதியாக சர்தார் படேல் உயிரியல் பூங்காவையும் பிரதமர் திறந்துவைத்தார்.

அதன்பின்னர், பூங்காவை கண்டுகளித்த பிரதமர் மோடி, அங்கு பறவைகள் கூண்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன் மோடி விளையாடி மகிழ்ந்தார்.

சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவில் உள்ள பிரம்மாண்ட பறவைகள் கூண்டு பற்றி பிரதமர் கூறுகையில், ” இந்த உயரமான பறவைகள் கூண்டு, பறவைகளை ரசிப்பர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். கெவாடியாவுக்கு வந்து, உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்” என்றார்.

இதனைதொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கான படகு போக்குவரத்தையும் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, படகில் பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து, கெவாடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்ற பிரதமர், அங்கு பல வண்ண விளக்குகளால் மின்னும் காட்சிகளை தொடங்கிவைத்தார். இதன்மூலம், சர்தார் சரோவர் அணை, இரவு நேரத்தில் பார்வையாளர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒற்றுமையின் சிலைக்கான இணையதளத்தையும், கெவாடியா மொபைல் செயலியையும் பிரதமர் தொடங்கிவைத்தார். கண்கவர் தோட்டத்தை பார்வையிட்டார். இதில், இரவு நேரத்தில் மின்னும் விளக்குகளை கண்டுகளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page