113-வது ஜெயந்தியையொட்டி சென்னையில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு

Spread the love

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்தனர். அப்போது பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.


சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அருகில் அவருடைய உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

 

தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், க.பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், பா.பென்ஜமின், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட அதிகாரிகள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததோடு, சிலைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தி.மு.க. சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர்.

ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், வர்த்தகர் அணி துணைத்தலைவர் சி.ராஜா உள்பட நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் உள்பட நிர்வாகிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பா.ம.க. சார்பில் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர் வே.வடிவேல், அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டன் ஆகியோரும் தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர்.

இதேபோல், நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு தேவர் பேரவைகள், அமைப்புகள், மன்றங்களின் நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பெண்கள் பலர் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து தேவர் சிலையை வழிபட்டனர். கொரோனா காலத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தவர்களை தனிமனித இடைவெளியோடு முக கவசம் அணிந்து செல்ல அவ்வப்போது அங்கு அறிவுறுத்தப்பட்ட வண்ணம் இருந்தன.

நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தேவர் பிறந்தநாளையொட்டி மலர் வணக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page