நீர் அடித்து நீர் விலகாது என்பது போல நமக்குள்ளான சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு களத்தில் இறங்குங்கள் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

Spread the love

நீர் அடித்து நீர் விலகாது என்பது போல நமக்குள்ளான சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு களத்தில் இறங்குங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பேரிடர் காலங்களில் மக்களின் துயர் துடைக்க முதலில் நீளுகின்ற கைகளாக தி.மு.க.வினரின் கைகள் இருக்க வேண்டும் என்ற உணர்வினை நமக்கு அண்ணாவும், கருணாநிதியும் ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். இந்த கொரோனா கொடுந்தொற்றுக் காலத்திலும் அந்த ஈரம் காயாமல், ஒன்றிணைவோம் வா என தொண்டர்களை அழைத்தேன். உங்களில் ஒருவனான என்னுடைய உளப்பூர்வமான அன்பழைப்பினை ஏற்று மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் உதவிக்கரங்களை தாராளமாக நீட்டினர். நல்ல உள்ளங்களை தங்களுடன் இந்த பணியில் இணைத்து, எளிய மக்களின் பசியாற்றி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.

 

குடும்ப கட்சி என்று வக்கற்ற எதிரிகள் செய்யும் விமர்சனங்களை புறந்தள்ளி, ஆமாம்.. இது குடும்ப கட்சிதான்.. குடும்பமே ஒரே கட்சி என்கிற பெருமிதத்தை தி.மு.க. குடும்பத்தினர் வழங்கினர். சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் எப்போதும் போல தி.மு.க. விரைந்து செயலாற்றுகிறது. கருணாநிதி இல்லாமல் நாம் சந்திக்கின்ற முதல் சட்டமன்றத் தேர்தல் களம். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அதனைத் கருணாநிதி ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை நமக்கு ஓய்வில்லை, உறக்கமில்லை என்ற உறுதியுடன் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆர்வம் பொங்க நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அந்த கூட்டங்களில் கிளைக் கழகத் தேர்தல்கள் எந்தளவில் நடைபெற்றுள்ளன என்பதையும் முழுமையாக ஆய்வு செய்து, வார்டுகளில்கூட நிர்வாகிகளுக்கான இடங்கள் காலியாக இல்லாத வகையில், முழுமையாக நிரப்பப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். அடிமட்டம் வரையிலான உள்கட்சி ஜனநாயக அமைப்பு பலம் பெறும்போதுதான், கோட்டை வரை வெற்றிக்கொடி உயர்ந்து பறக்கும்.

ஏறத்தாழ 10 ஆண்டுகாலமாக அனைத்துத் தொகுதிகளும் சந்தித்துள்ள சீரழிவுகள், மக்களின் மாறாத் துயரம், ஆட்சி மாற்றத்திற்குத் தீர்மானமான மனநிலை, தி.மு.க.வின் மீதான அசைக்கவியலா நம்பிக்கை என அனைத்தும் ஆதாரங்களுடன் அலசப்பட்டிருக்கின்றன. மாபெரும் மகத்தான வெற்றியை தி.மு.க.விற்கும், அதன் கூட்டணிக்கும் வழங்குவதற்குத் தமிழக மக்கள் ஆயத்தமாகவே உள்ள நிலையில், நாம் ஆற்ற வேண்டிய களப்பணி, கட்டிக்காக்க வேண்டிய ஒருங்கிணைப்பு, ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான புரிதல், ஒவ்வொரு வாக்காளரிடமும் பெற வேண்டிய நம்பிக்கை, ஆளுந்தரப்பினரின் பணபலம், அதிகார ஆட்டம் இவற்றையும் கவனத்தில் கொண்டே செயலாற்ற வேண்டும் என்பதையும், மமதையோ சுணக்கமோ கிஞ்சித்தும் தலைகாட்டக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டிடத் தவறவில்லை.

தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் உறுதியினை, உங்களில் ஒருவனான நான் எதிர்பார்க்கிறேன். தி.மு.க. மக்களின் பேரியக்கம். அதனால் மக்களிடம் செல்லுங்கள், மக்களுக்குத் துணையாக என்றும் நில்லுங்கள், தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், அடிமை ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் நினைவூட்டிச் சொல்லுங்கள்.

நீர் அடித்து நீர் விலகாது என்பது போல நமக்குள்ளான சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு களத்தில் இறங்குங்கள். அதிகாரத்தில் இருப்போரின் ஆட்டத்தை மீறி மக்களின் பேராதரவுடன், ஆச்சரியம் தரும் வெற்றிக்கு ஆயத்தமாகுங்கள். அந்த வெற்றி களத்திற்கான விதை, இந்தக் கலந்தாலோசனை கூட்டங்களில் ஊன்றப்பட்டிருக்கிறது. உழைப்பெனும் நீர்வார்த்து உன்னத வெற்றியை காண்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page