அமெரிக்க அதிபர் தேர்தல்; வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்

Spread the love

பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

வாஷிங்டன்,

பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவுதான், அங்கு முடிவுகள் வெளியாவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா அச்சத்தாலும், முன்கூட்டியே வாக்கு அளிப்பதை பல மாகாணங்களும் எளிமைப்படுத்தியதாலும், இந்த முறை முன்கூட்டி வாக்கு அளித்தவர்களும், தபால் மூலம் வாக்களித்தவர்களும் அதிகம், கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 4.60 கோடியாக இருந்துள்ளது. இந்த முறை அது 10 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த முறையை விட இந்தமுறை வாக்குகள் அதிகம் என்றாலும், எண்ணுவதற்கு அதே எண்ணிக்கையிலான அதிகாரிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270-ஐ கைப்பற்றிவிட்டால் வெள்ளை மாளிகையில் அமர்ந்து உலகையே விரலசைவில் ஆட்டிப்படைக்க முடியும் என்பதால், நாற்காலியை தக்க வைப்பதற்கு டொனால்டு டிரம்பும், நாற்காலியை கைப்பற்றுவதற்கு ஜோ பைடனும் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
எதிர் தரப்பில் தேர்தலை திருட முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் ஜோ பைடன் அவற்றை திட்டவட்டமாக நிராகரித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நமது ஜனநாயகத்தை யாரும் நம்மிடமிருந்து பறிக்கப்போவதில்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை” என கூறினார்.

இதே போன்று குடியரசு கட்சி ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றிய முன்னாள் அரசு வக்கீல்கள் 19 பேர் டிரம்புக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள், “டிரம்பின் அச்சுறுத்தல்கள், மோசடி கருத்துகள், வெற்றியின் தவறான அறிவிப்புகள் ஆதாரமற்றவை, பொறுப்பற்றவை” என கூறி உள்ளார்கள்.

இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, வட கரோலினா, நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. பரபரப்புக்கும் பஞ்சமில்லை. பிலடெல்பியாவில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாக்கும் சதித்திட்டத்தின் மத்தியில் ஆயுதம் ஏந்திய ஒரு நபர் பென்சில்வேனியா மாகாண நகரமான பிலடெல்பியாவில் கைது செய்யப்பட்டார். அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் பிரசார குழு கோர்ட்டை நாடியபோது, அது நிராகரிக்கப்பட்டது. இதேபோல் மிச்சிகனிலும் டிரம்ப் தரப்பு வழக்கை அந்த மாகாண கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

ஜோ பைடன் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். டிரம்பை விட ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அரிசோனாவை ஜோ பைடன் கைப்பற்றிவிட்டால், அவர் நெவேடாவிலும், ஜார்ஜியா அல்லது பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று விட்டால் போதுமானது. அவர் அமெரிக்க ஜனாதிபதியாகி விட முடியும். ஜார்ஜியாவிலும், நெவேடாவிலும், அரிசோனாவிலும் கூடுதலாக வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னணியில் உள்ளார்.

டிரம்பை பொறுத்தமட்டில் அவர் பென்சில்வேனியாவில் மட்டுமே முன்னிலை பெற்று வந்தார். ஆனால் அங்கும் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். எனவே ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதி ஆவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page