சீன தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தம்

Spread the love

பிரேசில் நாட்டில் சீன தடுப்பூசி சோதனையால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பிரேசிலியா,

உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பில் 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 56.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது. பிரேசில், உலகளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் கொரோனாவால் சந்தித்துள்ளது. அங்கு 1.62 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீள ஒரு வழி தெரியாமல் கொரோனா தத்தளித்து வருகிறது.

இந்த நிலையில் சீன மருந்து நிறுவனமான சைனோவேக், ‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில் நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியின் 60 லட்சம் ‘டோஸ்’களை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அனுமதி அளித்தது.இந்த நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பரிசோதனையின்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அந்த தடுப்பூசியை பிரேசிலில் தயாரித்து வந்த சாவ் பாவ்லோ மாகாண அரசு நிறுவனமான புட்டான்டன் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையொட்டி சாவ் பாவ்லோ மாகாண அரசு வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் பொதுவாக இத்தகைய பாதிப்பு நிகழ்கிறது. இது குறித்த தகவல், அன்விசா மூலம் வராமல் ஊடகங்கள் மூலம் வந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைக்கும் அன்விசாவின் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது” என கூறி உள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசி பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த தடுப்பூசியை பகிரங்கமாக நிராகரித்த அவர், பிரேசில் மக்கள் கினிப்பன்றிகளாக தடுப்பூசி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அவர் கூறி இருந்தார்.

இந்த தடுப்பூசியை சோதனையின்போது போட்டுக்கொண்ட ஒருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது இறப்புக்கு தடுப்பூசிதான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அங்கு 10 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு சோதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவின் பைஸர் மற்றும் அதன் கூட்டாளியான ஜெர்மனியின் பயோஎன்டெக், தங்களது தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக 44 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது தடுப்பூசியில் பாதுகாப்பு கவலைகள் எதுவும் எழவில்லை என்று பைஸர் கூறி உள்ளது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ., தங்களை மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வுக்காக நாடுவதற்கு முன் குறைந்தபட்சம் அதை போட்டுக்கொண்ட பாதி எண்ணிக்கையிலான தன்னார்வலர்களையாவது தொடர்ந்து 2 மாதங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இந்த நிலையை இம்மாத இறுதியில் பைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் அடைந்து விடும் என தகவல்கள் கூறுகின்றன.

மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு தொலைவில் இல்லை என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page