எனது வெற்றியை தடுப்பதற்காகவே தடுப்பூசி குறித்து தாமதமாக அறிவிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு

Spread the love

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுப்பதற்காகவே தடுப்பூசி குறித்து தாமதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதாக டிரம்ப் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.


வாஷிங்டன்,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. இந்த வைரசை ஒழிக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் அமெரிக்காவின் பைசர் என்கிற நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ள தடுப்பூசி மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் 3-ம் கட்டத்தில் உள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என தொடர்ச்சியாக கூறி வந்தார்.

அப்படி கொரோனா தடுப்பூசி தயாராகி விட்டால் அது தனக்கு தேர்தலில் இமாலய வெற்றியை தேடி தரும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அவர் எண்ணியபடி தேர்தலுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி தயாராகவில்லை. அதேபோல் தேர்தலிலும் அவர் வெற்றி பெறவில்லை. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில் 3-வது கட்ட பரிசோதனையில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் தங்கள் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 90 சதவீதத்துக்கும் மேல் பயனளிக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாக பைசர் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது. இது உலக அளவில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மிகப்பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில்தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பைசர் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்பே வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் ஜனநாயக கட்சியினர் தடுப்பூசி மூலமாக நான் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய அறிவிப்பு 5 நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ளது.

எனக்கு பதில் ஜோ பைடன் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் ஆனாலும் தடுப்பூசி கிடைத்திருக்காது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் இவ்வளவு விரைவாக தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து இருக்காது. அதிகாரத்துவம் கோடிக்கணக்கான உயிர்களை அழித்திருக்கும்.

பைசரும், மற்ற நிறுவனங்களும் தேர்தலுக்கு பிறகு மட்டுமே தடுப்பூசி வெற்றியை அறிவிப்பார்கள் என்று நான் நீண்ட காலமாக கூறி வந்தது தற்போது நடந்துள்ளது.

ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு அதை அறிவிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. அதேபோல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் உயிர்களை காப்பாற்றுவதற்காக இதை முன்னரே அறிவித்திருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page