அமெரிக்க ராணுவ மந்திரி மார்க எஸ்பரை டிரம்ப் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கினார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான மந்திரிசபையில் ராணுவ மந்திரியாக இருந்து வந்தவர் மார்க் எஸ்பர். இவரை ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென பதவியிலிருந்து நீக்கினார்.
இதுகுறித்து டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “ராணுவ மந்திரி பதவியில் இருந்து மார்க் எஸ்பர் நீக்கப்படுகிறார். அவர் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் புதிய ராணுவ மந்திரியாக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. கிறிஸ்டோபர் மில்லர் மிகவும் சிறப்பாக பணியாற்றுவார்” என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் 4 ஆண்டுகால பதவியில் மார்க் எஸ்பர் அமெரிக்காவின் 2-வது ராணுவ மந்திரி ஆவார். அவருக்கு முன் ராணுவ மந்திரியாக இருந்த ஜேம்ஸ் மாட்டிஸ், சிரியாவில் இருந்து படைகளை திரும்பப் பெறும் விவகாரத்தில் டிரம்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மார்க் எஸ்பரை ராணுவ மந்திரியாக டிரம்ப் நியமித்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டநிலையில், ‘மிலிட்டரி டைம்ஸ்’ என்ற பத்திரிக்கைக்கு மார்க் எஸ்பர் அளித்த பேட்டியில் தான், ஜனாதிபதி எது கூறினாலும் ஆமாம் சொல்லும் நபர் அல்ல என கூறினார்.
இதுவே டிரம்ப் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்காக வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுடன் மார்க் எஸ்பர் கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அமெரிக்க ராணுவ மந்திரியாக அவர் மேற்கொண்ட கடைசி வெளிநாட்டு பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.