ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை காப்பாற்றிய ஹீரோ டாக்டர்

Spread the love

ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய ஹீரோ டாக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.


புகாரெஸ்ட்,

ருமேனியா நாட்டின் வடகிழக்கில் பியட்ரா நீம்ட் நகரில் அரசு மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சனி கிழமை மாலை அங்கு திடீரென தீப்பிடித்தது.

அந்த தீ மளமளவென பரவியதில் பலத்த காயமடைந்த 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் 67 முதல் 86 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இதுதவிர சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் மற்றும் ஒரு டாக்டர் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் ஐயாசியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த நாட்டின் சுகாதார மந்திரி நெலு டாடரு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த கோர தீ விபத்துக்கு மின்கசிவுதான் காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் கிளாஸ் அயோஹானிஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டபொழுது, காயமடைந்த டாக்டர் கேட்டலின் டென்சியூ கொரோனா நோயாளிகளை தீயில் இருந்து பாதுகாக்க உதவியாக செயல்பட்டு உள்ளார்.

இதுபற்றி பிரதமர் லுடோவிக் கூறும்பொழுது, நோயாளிகளை காக்க துணிச்சலுடனும், தியாக உணர்வுடனும் ஹீரோவாக செயல்பட்ட டாக்டருக்கு நான் மரியாதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டென்சியூ 40 சதவீத காயங்களுடன் பெல்ஜியத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிறப்பு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். நோயாளிகளை காக்கும் பணியில் ஈடுபட்ட அவருக்கு, டாக்டர்களின் அமைப்பு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் என பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page