புதிய ராணுவ மந்திரியை தேர்வு செய்வதில் ஜோ பைடனுக்கு சொந்த கட்சியிலேயே அழுத்தங்கள் வலுக்கின்றன.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக அடுத்த மாதம் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தனது மந்திரிசபையில் இடம் பெறப்போகிறவர்களை இறுதி செய்வதில் தீவிராக உள்ளார். அவர் புதிய ராணுவ மந்திரியாக, அந்த துறையின் முன்னாள் துணை மந்திரியான மிச்செலி புளூர்னாய் என்ற பெண் தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார். ஆனால் இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவரையே புதிய ராணுவ மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கருப்பின தலைவர்கள், ஜோ பைடனுக்கு அழுத்தம் தந்து வருவதாக வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன. மிச்செலி புளூர்னாயின் கடந்த கால வரலாறு, தனியார் துறையுடனான அவரது தொடர்புகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக 7 முற்போக்கு குழுக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இவர்கள் தருகிற அழுத்தங்கள், ஜோ பைடனுக்கு தலைவலியாக மாறி உள்ளது. மேலும், முன்னாள் ராணுவ தளபதி லாயிட் ஆஸ்டின், பென்டகன் ராணுவ தலைமையகத்தின் மூத்த வக்கீல் ஜே ஜான்சன் உள்ளிட்டோரும் ராணுவ மந்திரி பதவியை பெறும் போட்டியில் உள்ளதாக வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.