கேரளாவில் பிற மாநில லாட்டரி விற்பனை சட்ட விரோதம் இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கொச்சி,
கேரள மாநிலத்தில் பிற மாநில லாட்டரி விற்பனைக்கு தடை இருந்து வந்தது. இந்த நிலையில் நாகலாந்து மாநில லாட்டரி தடைக்கு எதிராக கோவையை சேர்ந்த பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி முகமது முஷ்டாக், நாகலாந்து லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், பிற மாநில லாட்டரி விற்பனை மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாகலாந்து லாட்டரி, மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் நடத்தப்பட்டாலும்கூட இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசைத்தான் மாநில அரசு நாட முடியும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிற மாநில லாட்டரி விற்பனைக்கு தடைவிதித்து கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தையும் ஐகோர்ட்டு ரத்து செய்து விட்டது. எனவே இனி கேரளாவில் பிற மாநில லாட்டரி விற்பனை சட்டவிரோதம் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.