2020-ம் ஆண்டு விடைபெற்றது; 2021-ம் ஆண்டு பிறந்தது – அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

Spread the love

2021-ம் ஆண்டு பிறந்ததையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


சென்னை,

2020-ம் ஆண்டு விடைபெற்றது. 2021-ம் ஆண்டு பிறந்தது. மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- கடந்த கால இருள் நீங்கும், கதிரொளி பரவும், மக்களின் கவலைகளை துடைத்திட வல்ல, காக்கும் கரங்களை கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும், தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன்.

இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்று பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும் தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- பிறக்கும் 2021-ம் ஆண்டு மக்களின் வாழ்வாதாரம் வளமாகி, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‘ என்பதை நிலை நாட்டும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும், பொலியட்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:- புத்தாண்டில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், நல்லாட்சி மலர்ந்திடவும், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அந்தவகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- 2021-ம் ஆண்டு அரசியலிலும், சமூகநீதியிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். 2021-ம் ஆண்டு இருளுக்கு பிறகு வரும் ஒளி, கோடைக்கு பிறகு வரும் வசந்தகாலம், பாலையை கடந்த பிறகு வரும் சோலை. சமூகநீதி தழைக்கும் என்று கூறி அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் எழுந்து விழும் அலைகளுள் ஒன்றாக எழுகிறது, 2021-ம் ஆண்டு. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைய உறுதி எடுத்துக்கொண்டு, தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- 2021-ம் ஆண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். 2020 போன்று அல்லாது 2021-ம் ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், அ.ம. மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், சு.திருநாவுக்கரசர் எம்.பி., பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ஜனநாயக ஜனதாதளம் (தமிழ்நாடு) தலைவர் டி.ராஜகோபால், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் நெல்லை ஜீவா, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல், அகில இந்திய காந்தி, காமராஜ், காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர்.

கவிஞர் வைரமுத்து, காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சி தலைவர் மார்டீன், வி.ஜி.பி. தலைவர் வி.ஜி.சந்தோசம், பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நாடார், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்துரமேஷ் நாடார், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், திண்டிவனம் ஸ்ரீராமுலு உள்பட பலரும் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page