கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 800 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா தெரிவித்துள்ளார்.

சென்னை,
சி.பி.ஐ. இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா, இந்தியா முழுவதும் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு காணொலி காட்சி மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 800 வழக்குகளுக்கு சி.பி.ஐ. தீர்வு கண்டுள்ளது. இதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்திலும் கூட சி.பி.ஐ. அலுவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளனர். உங்களது ஒத்துழைப்பின் காரணமாக கடந்த ஆண்டுக்கான இலக்கை அடைய முடிந்தது. வருங்காலங்களிலும் இதே போன்று சிறந்த முறையில் பணியாற்ற கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர், நவீன புலனாய்வு குறித்து அனைத்து அலுவலர்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும், இதன்மூலம் மட்டுமே இன்னும் சிறப்பான முறையில் செயல்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ.யில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.