மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு – நாளை மறுதினம் தொடக்கம்

Spread the love

மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் 13-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.


சென்னை,

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கியது. முதல் கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் சிறப்பு கலந்தாய்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது.

இவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். மேலும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்பட்டது போக மீதமுள்ள இடங்களும் நிரப்பப்படும்.

அந்த வகையில் மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் 13-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல்நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 11- ந்தேதி வரை அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பின்னர் 11-ந்தேதி பிற்பகல் முதல் 13-ந்தேதி வரை சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 399 மாணவ-மாணவிகள் பயன் அடைந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள 2-ம் கட்ட கலந்தாய்வில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் சுமார் 10-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page