தமிழகத்தில் இன்று 17 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

Spread the love

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை,

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ரூ.9 கோடி செலவில் 100 அதிநவீன படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு சுகாதார கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 129 பேர் இறந்த நிலை மாறி, தற்போது இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் குறைத்துள்ளோம்.

இறப்பு இல்லாத நிலையை கூடிய விரைவில், அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் உருவாக்குவார்கள். இதுவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 97.5 சதவீதம் பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (இன்று) கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்க இருக்கிறது. இந்த ஒத்திகை ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதல் படியும், முதல்-அமைச்சரின் ஆலோசனைபடியும் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெறும்.

அதன்படி, சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெல்லக்கோட்டை ஆரம்ப சுகாதார மையம், நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவமனை, சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நெமம் ஆரம்ப சுகாதார மையம், திருமழிசை ஆரம்ப சுகாதார மையம், கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், பூலுவாப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் என 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

சுகாதாரத்துறை சார்பில் இதற்கான திட்டமிடல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 47 ஆயிரத்து 500 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

21 ஆயிரத்து 170 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசியை போட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும்.

தடுப்பூசி போடுவது என்பது சுலபமான முறை அல்ல. பாதுகாப்பாக, கவனமாக, துல்லியமாக மத்திய அரசு சுகாதாரத்துறை, உலக சுகாதாரத்துறை வழிகாட்டுதலோடு செய்ய வேண்டிய வி‌‌ஷயம். 2½ கோடி மக்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம்.

கொரோனா காலத்தில் எம்.ஆர்.பி. மூலம் பணியமர்த்தப்பட்ட நர்சுகள் உள்ளிட்ட எல்லாருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முதல்-அமைச்சர் பரிசீலனைக்கு பிறகு, வரும் காலத்தில் நர்சு பணி நிரந்தரம் செய்யும் போது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page