விவசாய அமைப்புகளுடன் 4ந்தேதி பேச்சுவார்த்தை; ஆக்கபூர்வ முடிவு ஏற்படும் என மத்திய வேளாண் மந்திரி நம்பிக்கை

Spread the love

விவசாய அமைப்புகளுடன் 4ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவு ஏற்படும் என்று மத்திய வேளாண் மந்திரி கூறினார்.


புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் ஒரு மாதத்துக்கு மேலாக விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 40–க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளுடன் இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

கடந்த 30–ந் தேதி நடைபெற்ற 6–வது சுற்று பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. 2 கோரிக்கைகளில் பொதுக்கருத்து உருவானது. ஆனால், முக்கிய கோரிக்கைகளில் தீர்வு ஏற்படவில்லை. 7–வது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 4–ந் தேதி நடக்கிறது.

இந்த நிலையில், விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கடந்த 30–ந் தேதி நடந்த பேச்சுவார்த்தை சுமுகமான சூழ்நிலையில் நடந்தது. எனவே, 4–ந் தேதி நடக்கும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில், விவசாயிகள் நலனுக்காக ஆக்கபூர்வமான முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தைதான் கடைசி பேச்சுவார்த்தையாக இருக்குமா? என்று கேட்டதற்கு நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:–

எதிர்காலம் பற்றி நான் நிச்சயமாக எதுவும் கூற முடியாது. நான் ஜோதிடர் அல்ல. அந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும், அது நாட்டு நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கானதாகவே இருக்கும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் கோரிக்கையில் விவசாயிகள் பிடிவாதமாக இருப்பது உண்மைதான். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீங்காவிட்டால், அரியானா மாநிலத்தில் அனைத்து வணிக வளாகங்களையும், பெட்ரோல் விற்பனை நிலையங்களையும் மூடும் போராட்டத்துக்கு தேதி அறிவிப்போம் என்று சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரியானா–ராஜஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளும் டெல்லியை நோக்கி விரைவார்கள் என்று சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பயனளிக்காவிட்டால், 6–ந் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று யுத்வீர்சிங் என்ற விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page