ஆந்திராவில் ராமர் சிலையை தொடர்ந்து மற்றுமொரு இந்துமத கடவுள் சிலை சேதம்

Spread the love

ஆந்திர பிரதேசத்தில் ராமர் சிலையை தொடர்ந்து மற்றுமொரு இந்துமத கடவுள் சிலையை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.


கிழக்கு கோதாவரி,

ஆந்திர பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் ராமதீர்த்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடவுள் ராமர் சிலையை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தி இருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு இந்து சிலையை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமகேந்திரவரம் நகரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அதில், சுப்ரமண்யேஸ்வர கடவுளின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அதனை தாக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் துர்க பிரசாத் கூறும்பொழுது, வெள்ளி கிழமை அதிகாலை 3 மணிவரை நாங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டோம். அதுவரை எந்த சம்பவமும் நடைபெறவில்லை. எனினும், காலை 5 மணியளவில் வந்த கோவில் பூசாரி, சிலை உடைந்து இருப்பது பற்றி கண்டறிந்து உள்ளார்.

அதனால் இந்த சம்பவம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணிக்குள் நடந்திருக்க கூடும். சி.சி.டி.வி. கேமிராக்கள் இருந்தபோதிலும், அவை இந்த சிலையை நோக்கி வைக்கப்படவில்லை. நாங்கள் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் அதில் பெரும்பயன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவரான கன்னி கிருஷ்ணா என்பவர் கோவிலின் அறங்காவலராக இருந்து வருகிறார். இந்த சம்பவம்பற்றி பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page