4ந்தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

Spread the love

மத்திய அரசுடன் வருகிற 4ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.

ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே இது தொடர்பாக வருகிற 4–ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக விவசாய அமைப்பு பிரதிநிதிகள் நேற்று சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளில் வெறும் 5 சதவீதம் அளவுக்கே இதுவரை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 4–ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

குறிப்பாக அரியானாவில் வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்களை அடைப்பதற்கான தேதியை அறிவிப்போம். அரியானா–ராஜஸ்தான் மாநில எல்லையான ஷாஜகான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லிக்கு வருவார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்துவோம். இவ்வாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறினர்.

இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று 37–வது நாளை எட்டியது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள், டெல்லி எல்லைகளில் எந்த வித தொய்வும் இன்றி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தலைநகரில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினமான நேற்று 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும்.

இந்த கடுமையான குளிரிலும் இரவு–பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால் தங்கள் உடல்நலத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ள போதும் அவற்றை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே உறுதியாக உள்ளனர்.

இந்த போராட்டத்தையொட்டி டெல்லியின் எல்லைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் நூற்றுக்கணக்கான போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப்போல விவசாயிகளின் போராட்டத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது. இதனால் வாகனங்களை மாற்றுப்பாதைகளில் திருப்பி விடும் பணிகளில் ஏராளமான போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். வாகன நெரிசல் இல்லாத மாற்று பாதைகளை அடிக்கடி டெல்லிவாசிகளுக்கு போலீசார் அறிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே டெல்லியின் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் குடும்பங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏராளமான பெண்கள் போராட்டக்களத்துக்கு வருவதால் அங்கு கழிவறை, குளியலறை போன்ற வசதிகளுக்காக அவர்கள் திண்டாடி வருகின்றனர்.

எனவே பெண்களின் வசதிக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, போராட்டக்களத்திலேயே பசுமை கழிவறைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக சாலையோரத்தில் 10 அடி ஆழத்துக்கு குழிகள் தோண்டப்படுகின்றன. மறுசுழற்சி வசதி கொண்ட இந்த கழிவறைகளால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கரியும், மரத்தூளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் விவசாயிகள் பயன்படுத்திய நெய் டப்பாக்களை கொண்டே ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பிடங்களையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் தாங்களே பசுமை கழிவறைகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு கடும் நெஞ்சுறுதியுடன் போராடி வரும் விவசாயிகள், தங்கள் அடிப்படை தேவைகளை சமாளிக்க பல்வேறு தொண்டு நிறுவனங்களும் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page