தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை 2.57 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமிஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
அதன்படி, ஆண்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 401 பேரும், பெண்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 11 பேரும் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சென்னையில் 150 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 856 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க 856 முதன்மை கண்காணிப்பாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மையத்தில் மட்டும் 46 ஆயிரத்து 965 பேர் குரூப்-1 தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பின்னரே தேர்வு எழுதுபவர்கள் தேர்வு எழுதும் அறையின் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். தேர்வு எழுதும்போது சமூக இடைவெளியுடன் தேர்வர்கள் அமர வைக்கப்பட உள்ளனர். இதுபோன்ற பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளது.