தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தூத்துக்குடி,
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளாா். பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இன்று காலை 8.30 மணிக்கு பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரி பகுதியில் பருத்தி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். 9.15 மணிக்கு கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 10.15 மணிக்கு கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் தீப்பெட்டி தொழிற்சாலை கூட்டுறவு சங்க தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். 11 மணிக்கு கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.மதியம் 12 மணிக்கு விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் நெசவாளர்களை சந்திக்கிறார். 1 மணிக்கு விளாத்திகுளத்தில் மிளகாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார். இதனால் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருவதையொட்டி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி கயத்தாறு நாற்கர சாலையில் இருந்து கோவில்பட்டி வரை அ.தி.மு.க. கட்சிக்கொடி தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் நகர் முழுவதும் கட்சிக்கொடி தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.