உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரஸ் தோன்றி ஓராண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இது இதுவரை எந்தவொரு நோய்க்கும் நடக்காத மருத்துவ அதிசயம்.
அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்த தடுப்பூசியை இங்கே தயாரித்து வினியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ள புனேயின் இந்திய சீரம் நிறுவனம், அதன் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்தது.
அந்த விண்ணப்பத்தை பல்வேறு தரவுகள் அடிப்படையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுனர் குழு ஆராய்ந்து வந்தது. இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று நேற்றுமுன்தினம் அந்த வல்லுனர் குழு பரிந்துரை செய்தது.
இந்தநிலையில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து உருவாக்கி உள்ள கோவேக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அந்த நிறுவனம், கூடுதல் தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளை சமர்ப்பித்தது.
அவற்றை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுனர் குழு நேற்று முன்தினம் ஆராய்ந்தது. நேற்றும் அது தொடர்ந்தது. அந்த ஆய்வின் முடிவில், இந்த தடுப்பூசியையும் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று வல்லுனர் குழு பரிந்துரை செய்தது.
எனவே இவ்விரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எந்த நேரத்திலும் ஒப்புதல் வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.