உத்தர பிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தலைவராக செயல்பட்ட பாகிஸ்தானிய பெண் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தின் இடா மாவட்டத்தில் குடாவ் என்ற கிராமத்தில் பானு பேகம் என்ற பெண் வசித்து வருகிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பேகம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த கிராமத்தின் இடைக்கால தலைவராக இருந்து கிராம பஞ்சாயத்து விவகாரங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்து உள்ளது. இதனால் பேகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி பேகம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நான் தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. முன்னாள் கிராம தலைவர் என்னை கிராம தலைவராக்கினார். எனக்கு வேறெதுவும் அதிகம் தெரியாது என கூறியுள்ளார்.
இடா மாவட்ட பஞ்சாயத்துராஜ் அதிகாரியான அலோக் கூறும்பொழுது, கிராம தலைவராக பேகம் போட்டியின்றி கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர்களே இதற்கு பொறுப்பு.
கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன் அந்நபர் இந்திய நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியம். அதனால் இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.