டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Spread the love

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.


புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.

குறிப்பாக பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான டெல்லியின் பல்வேறு எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

எனவே இது குறித்து மந்திரிகள் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகளுடன், சுமார்41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான் பவனில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

விவசாயிகளுடன் போராட்டம் இன்றுடன் 40-வது நாளை எட்டும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன. அதைப்போல தங்கள் அவல நிலைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.

அந்தவகையில் இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது. அதேநேரம் இன்றைய பேச்சுவார்த்தையில் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் நிலவி வரும் கடுமையான குளிருக்கு மத்தியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழையும் பெய்தது. இதனால் விவசாயிகளின் போராட்டக்களத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்களது உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து விட்டன.

அவர்களது கூடாரங்கள் நீர் புகாதவையாக இருந்தாலும், அவற்றால் இந்த பலத்த மழையை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் மழையில் நனைந்தும், கடும் குளிரில் நடுங்கியவாறும் இரவை கழித்தனர். இதனால் அவர்கள் பெரும் தவிப்பும், அவதியிலும் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் நேற்று கூறியதாவது:-

மழை மற்றும் அதனால்ஏற்பட்ட வெள்ளத்தால் போராட்டக்களம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்குப்பின் குளிர் இன்னும் அதிகரித்து இருக்கிறது. ஆனால் எங்களது துயரங்களை பார்க்க அரசுக்கு மனமில்லை.

எங்கள் உடைகள் அனைத்தும் தண்ணீரில் நனைந்துவிட்டன. விறகுகள் நனைந்து விட்டதால், உணவு சமைக்க முடியவில்லை. ஒரு சிலரிடம் கியாஸ் சிலிண்டர் இருந்தாலும், அது இல்லாத விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் மழையோ, புயலோ, எந்த பிரச்சினை வந்தாலும், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட நகரமாட்டோம்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதற்கிடையே டெல்லியில் வருகிற 6-ந்தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page