டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் சமீபத்திய மழையையொட்டி கூடாரத்தில் தஞ்சமடைந்து உள்ளனர்.

புதுடெல்லி,
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. கடும் பனிப்பொழிவையும் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களுக்கு விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உணவு, தேநீர், படுக்கை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றன.
அரசு நடத்திய 6 சுற்று கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். டெல்லியில் சமீப நாட்களாக பனிப்பொழிவுடன் மழையும் சேர்ந்து கொண்டது.
இதனால் டெல்லி மற்றும் நொய்டா எல்லைகளை இணைக்கும் சில்லா எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் மழைப்பொழிவில் இருந்து தற்காத்து கொள்ள அதற்காக அமைக்கப்பட்டு உள்ள கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் ஒருவர் கூறும்பொழுது, கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற வேண்டுகோள்களை அரசு ஏற்று கொண்ட பின்பே நாங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவோம் என்று கூறியுள்ளார்.