அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 இன்று முதல் வினியோகம்

Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்று தொடங்குகிறது.


சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

இதற்காக ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி உருவம் பொறித்தது) வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப ‘பேக்கிங்’ செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை மட்டும் எடை போட்டு வழங்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டநெரிசலால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளாக பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.

அரிசி அட்டைதாரர்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கிய டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் காலை வேளையில் 100 பேருக்கும், மதிய வேளையில் 100 பேருக்கும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

ரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும். கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில், அவர்களுக்கு முதலில் பொருட்களை வழங்க வேண்டும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள் ஏற்படுத்திட வேண்டும். பொருட்கள் வாங்க வருபவர் கள் முக கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பண புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ஒவ்வொரு கடைக் கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை சார்பில் அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்புடன் ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.

டோக்கனில் குறிப்பிட்ட நாள் அன்று வர முடியாதவர்கள் 13-ந் தேதி அன்று பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொருட் களை பெற முடியாதவர்கள் 19-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page